By Dr. Prof. S. Anandha Krishna Raj
(This is our fourth vernacular post under the 2021 edition of the JILS Vernacular Publication Initiative, that marks the celebration of the International Mother Language Day. Through this initiative, we at JILS, are attempting to take a small step towards making legal education and information more inclusive and accessible, and countering the stronghold of English in legal academia with publication in vernacular languages.)
முன்னுரை
சர்வதேசச் சட்டம் என்ற சொல் தேசியம் என்ற கோட்பாடு உருவான பின் உருவான ஒன்று ஆகும். பண்டைய காலத்தில் நாடுகளுக்கு இடையே ஆன சட்டம் என்பதை அரசுகளுக்கு இடையே ஆன சட்டம் என வரையறுக்கலாம். புரிதலுக்காகச் சர்வதேசச் சட்டம் என்று தலைப்பு சுட்டினாலும் அது பண்டைய தமிழகத்தின் நாடுகளுக்கு (அரசுகளுக்கு) இடையே ஆன சட்டமே ஆகும்.
இந்தியாவில் ‘சர்வதேச சட்டம்’ என்ற தலைப்பில் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு புத்தகங்களாக ஆராய்ச்சிக் கட்டுரைகளாக வெளியிடப்பட்டிருக்கின்றன. அவற்றுள் குறிப்பிடத்தக்கது நீதியரசர் நாகேந்திர சிங் எழுதிய ‘இந்தியாவும் சர்வதேச சட்டமும்’ என்ற புத்தகம் முக்கியமானது. நாகேந்திர சிங் தனது புத்தகத்தில், இந்தியா என்று குறிப்பிடுவது தற்போதைய முழு இந்திய நிலப்பரப்பையும் அல்ல; மாறாக பண்டைய இந்திய நிலப்பரப்பான கங்கைச் சமவெளி மற்றும் விந்திய மலைகளுக்கு இடையிலான ஆரிய வர்தத்தம் மட்டுமே ஆகும். அவருடைய சர்வதேசச் சட்டத்தின் கூறுகள் முழுக்க சமஸ்கிருத, வேதப்பண்பாட்டை அடிப்படையாகக் கொண்டவை. வேதமும், மனுஸ்மிருதியும், புராணங்களும்தான் அவர் நூலின் மூல ஆதாரங்களாகக் கொள்ளப்பட்டுள்ளன. இவற்றை விடுத்து வேறொன்றின் மீது அந்நூலில் அதிக கவனம் செலுத்தவில்லை. தென்னகத்தைப் பற்றிய குறிப்போ (விரல் விட்டு எண்ணம் படியான ஒரு சில இடங்கள் தவிர) தென்னக மொழிகளான, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற இலக்கியங்களில் உள்ள சர்வதேசச் சட்டக் கூறுகளோ அவருடைய ‘இந்தியாவும் சர்வதேசச் சட்டமும்’ என்ற புத்தகத்தில் இடம்பெறவில்லை. இதுமட்டுமில்லாமல் இன்றைய இந்தியாவின் வடகிழக்குப் பிரதேசம் பற்றிய குறிப்புகளும் இல்லை.
இந்தச் சூழ்நிலையில் மற்ற இந்திய மொழிகளின் இலக்கியங்களில் இருந்து சர்வதேசச் சட்டங்களை ஆராய்ந்தறிய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்தக்கட்டுரையின் நோக்கமும் அதுதான். இக்கட்டுரை தமிழ் இலக்கியமான சங்க இலக்கியத்திலும் அதைத் தொடர்ந்த காப்பியகால இலக்கியத்தில் இருந்தும் மற்றும் பல்வேறு கல்வெட்டுகள், நிகழ்வுகளின் மூலம் பண்டைய தமிழகத்தின் சர்வதேசச் சட்டக்கூறுகளை இனங்காண முயற்சிக்கிறது.
பண்டைய தமிழ் இலக்கியங்கள் குறிப்பாக, சங்க இலக்கியங்கள் மற்றும் திருக்குறள் ஒன்றை வலியுறுத்துகின்றன. அவை போரைத் தவிர்ப்பது என்ற கொள்கையாகும். தமிழரின் போர் அறம் என்பது போரைத் தவிர்ப்பது, சமாதானமாகப் போவது, அப்படி வேறுவழியில்லாமல் போர் செய்ய வேண்டி வந்தால் தன்னை எப்படி தற்காத்துக் கொள்வது, அதற்காகப் படைத் திரட்டுவது என்பதாகப் போரைத் தவிர்க்கும் வகையிலேயே பண்டைய தமிழ் இலக்கியத்தின் சர்வதேசச் சட்டக்கூறுகள் அமைந்துள்ளன. ஒரு சில இடங்கள் தவிர வன்முறையும் போரும் மனித குலத்துக்கு எதிரானதாகவும் அமைதியே நிரந்தர தீர்வு என்பதாகவும் வலியுறுத்துகின்றன. இதற்கு மாறாக வடமொழி இலக்கியங்கள் போரை மய்யமாகக் கொண்டும் எவ்வித அறமும் இல்லாமல் போர் செய்து வெற்றியை ஈட்ட வேண்டும், போர் செய்வது முக்கிய மனித கடமை என்று வலியுறுத்துகின்றன. பகவத் கீதை இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.
சங்க இலக்கியத்தில் உலக சகோதரத்துவம்
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற புறநானூற்றுப் பாடலை இயற்றியவர் கணியன் பூங்குன்றனார்.[1] இப்பாடல் சாதி, மதம், இனம், பாலினம் கடந்த உலக சகோதரத்துவத்தை வலியுறுத்துவதாகும். இன்று மனிதர்களுக்குப் பிரிவு ஏற்பட்டு மனித இனம் பல்வேறு தேசமாகவும் நாடுகளாகவும் பிரிவுற்று இருக்கின்றன. இவை மனிதன் உருவாக்கிய செயற்கை எல்லைகளே. இதைத் தாண்டி மானுடர் யாவரும் ஓரினம், ஒரு குடும்பம் என்ற வகையில், யாதும் எம்முடைய ஊர் என்றும், எல்லோரும் நம் உறவினர் என்றும் கூறும் இந்த மிகச்சிறந்த கோட்பாடு இன்றைய சர்வேதசச் சட்டத்தின் அடிப்படைக் கொள்கையாகப் (fundamental Principles of international law) போற்றத்தக்கது. அதே காலத்தில் தான் மனுஸ்மிருதியும் மற்ற ஏற்றத்தாழ்வுகளை உறுதிப்படுத்தும் இலக்கியங்களும், மேலத்தேய மற்றும் கீழத்தேய தத்துவங்களும் உள்ளன. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற சிந்தனை அதில் இருந்து விலகி தனித்துவமாக தமிழரின் தத்துவ மரபாக நிற்கிறது. மேலும் திருக்குறளிலும் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற குறள் பிறப்பின் அடிபடையில் மனிதர்களைப் பிரித்தல் கூடாது என்கிறது. ஒருவர் செய்யும் தொழிலின் அடிப்படையில் மனிதரின் உயர்வு தாழ்வு அமையாது என்று மனித குலத்தின் சமத்துவத்தை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் உறுதி செய்கிறது.
அமைதியான முறையில் நாடுகளுக்கு இடையேயான சச்சரவு தீர்த்தல்
ஔவையார் எனும் பெண்பால் புலவர் தனது ராஜதந்திரத்தின் மூலமாக இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட பூசலைத் தீர்ப்பது பற்றியான புறநானூற்றுப் பாடல் இன்றைய சர்வதேசச் சட்டத்திற்கான வரையறையை மாற்றி அமைக்கிறது. ஔவையார் அதியமானின் உற்ற நண்பராவார். அவர் மற்ற பெண்பாற் புலவர்களைக் காட்டிலும் சங்க காலத்தில் உயர்ந்து நிற்கிறார். அவர் ஆண் பெண் பாகுபாடு இல்லாத சங்க காலத்தின் சான்றாக விளங்குகிறார்.
அவருடைய பெரும்பாலான பாடல்கள் சங்க காலத்தில் கையாண்ட போர்முறைகளைப் பற்றியன. அவைகள் சங்ககால அரசர்களின் வல்லமையையும் சர்வதேசப் போர்ச் சட்டங்களைப் (international humanitarian law) பின்பற்றுவதையும் நினைவூட்டுவதாக அமைந்துள்ளன. அவரின் ஒரு பாடலில் அரசனை ஒரு முதலைக்கு சமமாக எடுத்துக்கூறுகிறார். ஒரு முதலையானது அங்கு விளையாடும் சிறு குழந்தைகளுக்குத் துன்பம் விளைவிக்காமல் அமைதியாக இருக்கும். ஆனால் அதன் பலமோ யானையைக் கொல்வதற்கு உரிய வலிமை வாய்ந்தது. இதன் பொருள், ஒரு அரசனானவன் குடிமக்களாகிய குழந்தைகளைத் துன்புறுத்த மாட்டான். ஆனால் அவனுடைய வலிமை எதிரிகளை நோக்கித்தான் இருக்கும். பெண்கள் மற்றும் குழந்தைகளைத் துன்புறுத்தாத கொள்கை போர்க்களத்தில் கடைப்பிடிக்கப்பட்டது. போர் வீரருக்கும் மற்ற பொதுமக்களுக்கும் உள்ள வேறுபாடு காணப்பட்டது.
ஔவையார் ஒரு புலவராக மட்டும் இன்றி அரசியல் அறிஞராகவும் இருந்தார். ஔவையின் நண்பரும் அரசனுமான அதியமான் நெடுமான் அஞ்சி அவரைத் தூதுவராக நியமித்தான். காஞ்சிபுரத்தை ஆண்ட தொண்டைமான் எனும் மன்னன் அதியமானை எதிர்த்து போர் செய்வதற்குத் தயாரிப்புகள் செய்து வந்தான். இதைக் கேள்விப்பட்ட ஔவையார் தூதுவராகச் சென்று போரைத் தவிர்ப்பேன் என்று அதியமானிடம் வாக்குறிதி கொடுத்து விட்டு தொண்டைமானைக் காண காஞ்சிபுரம் சென்றார். தொண்டைமான், ஔவையார் தனது எதிரி அதியமானின் நண்பர் எனத் தெரிந்தும் மன்னருக்குடைய மாண்புடன் ஔவையாரை வரவேற்றான். ஔவையின் கல்விச்சிறப்பும் புலமையும் கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதை தொண்டைமான் அவரை வரவேற்றதில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
அத்தகைய தொண்டைமான் ஔவையைத் தன்னுடைய படைக்கலக் கொட்டிலுக்கு அழைத்துச் சென்றான். அங்கு தன்னுடைய ஆயுத தளவாடங்களைப் பெருமையுடன் காண்பித்தான். அவைப் புதிதாகவும் பளபளப்பாகவும் அன்று உருவாக்கியது போல் இருந்தன. இவற்றை ஔவையார் பார்வையிட்டட பின் அவனைப் பார்த்து
இவ்வே, பீலி அணிந்து, மாலை சூட்டி,
கண் திரள் நோன் காழ் திருத்தி, நெய் அணிந்து,
கடியுடை வியல் நகரவ்வே; அவ்வே,
பகைவர்க் குத்தி, கோடு, நுதி, சிதைந்து,
கொல் துறைக் குற்றில மாதோ என்றும்
உண்டாயின் பதம் கொடுத்து,
இல்லாயின் உடன் உண்ணும்,
இல்லோர் ஒக்கல் தலைவன்,
அண்ணல் எம் கோமான், வைந் நுதி வேலே. (புறம்:95)
இதன் பொருள் தொண்டை மன்னனே உன்னுடைய படைக்கருவிகள் புதிதாக மயில் தோகை அணிந்து மாலையும் சூட்டிக்கொண்டு திருத்தமாகப் பளபளப்பு மாறாமல் காவலையுடைய பெரிய நகரத்தில் பாதுகாப்பாக உள்ளன. ஆனால் அங்கே எங்கள் தலைவனும் எளிய மக்களின் அன்பிற்குரியவனும் ஆன அதியமானின் கூர்மையான நுனியுடைய வேல்கள் போர்க்களத்திலே எதிரிகளைக் குத்தியதால் அவை முனை மழுங்கிப் போயின. இப்போது கொல்லன் இருப்பிடமாகிய பட்டறைக்குள் பழுது பார்த்துச் சரி செய்வதற்காகக் கிடக்கின்றன என்றார்.
ஔவையார் தொண்டைமானுக்குக் குறிப்பாக உணர்த்தியது யாதெனில், அதியமானின் படைக்கருவிகள் தொடர்ந்து போரில் பயன்படுத்துவதால் அவை முனை மழுங்கி கொல்லன் பட்டறையில் கிடக்கின்றன. தொண்டைமானின் ஆயுதங்களோ இதுவரையில் போரில் பயன்படுத்தப்படாமல் புதிதாக உள்ளன. போர் அனுபவம் வாய்ந்த அதியமானிடம் போர்க்கள அனுபவம் இல்லாத தொண்டைமான் போரிட்டால் தோல்வியே சந்திக்க நேரிடும் என்பதாகும்.
உண்மையை உணர்ந்த தொண்டைமான் போரைத் தவிர்த்து ஔவையாருக்கு உண்மையை உணர்த்தியதால் நன்றி பாராட்டினான். இவ்வாறு ஔவையார் தன் அறிவின் மூலம் ஆயுதமின்றி ஒரு போரையும் அதனால் விளையும் உயிர், பொருள் சேதத்தையும் தவிர்த்தார்.[2]
பண்டைய தமிழகத்தில் குடியுரிமை
குடியுரிமை என்பது நவீனகால வரலாற்றில் குறிப்பாக பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின் வழக்கத்தில் வந்தது. இது தவிர்த்து பண்டைய கிரேக்கத்தில் ஒருவிதமான குடியுரிமை இருந்தது. ஆயினும் அது அடிமைகளுக்கு மறுக்கப்பட்டது. பழந்தமிழகத்தில் ஒரு வகையான குடியுரிமை இருந்தாகத் தெரிகிறது. சிலப்பதிகாரத்தில் கண்ணகி பாண்டிய மன்னனின் அவைக்குள் வரும்போது பாண்டிய மன்னனின் கேள்வி அவள் எந்த நாட்டு குடிமகள் என்பதாகும். அதற்கு கண்ணகி நான் சோழநாட்டு குடிமகள் என்று பதிலுரைத்தாள்.[3] மேலும் அப்பர் எனும் சைவ சமயத்தைச் சார்ந்த அறிஞர் எழுதிய தேவாரத்தில் தான் யாருக்கும் குடியல்ல இறைவனுக்கு மட்டுமே தான் கட்டுப்பட்டவன் எனக்கூறுகிறார்.[4] குடிமகன் என்பவன் அரசனுக்கும் அரசுக்கும் கட்டுப்பட்டவன். ஆங்கிலத்தில் Subjects எனும் வார்த்தை இதைச் சிறப்பாக உணர்த்தும். அத்தகைய குடிமக்கள் என்பவர்கள் சுதந்திரமானவர்கள் அல்ல. இன்றும் கூட குடிமக்கள் என்றால் கடவுச்சீட்டு உதவிக்கொண்டு வேறுநாடு செல்ல முடியும். அப்பர் கூறுவது என்னவென்றால் தான் எந்த மன்னனுக்கோ அரசுக்கோ கட்டுப்படாதவன். ஆதலால் என்னை யாரும் பணியவைக்கவோ கட்டுப்படுத்தவோ சொந்தம் கொண்டாடவோ முடியாது என்பதுதான்.
மேலும் ஒரு மன்னனுடைய நற்பண்பையும் நீதியை மதிக்கும் பண்பும் பண்டைய தமிழக மன்னர்களிடையே காணப்பட்டது. கண்ணகியின் கணவன் கோவலன் கொல்லப்பட்டத்தற்கு நீதி கேட்டு கண்ணகி பாண்டியன் அவையில் அவள் கணவன் குற்றமற்றவன் என்பதை நிரூபித்தாள் தன் நீதியின் செங்கோல் வளைந்ததை எண்ணிய பாண்டிய மன்னன் தன் உயிரைக் கொடுத்து அதை நிமிர்த்தினான். இதைக் கேள்விப்பட்ட சேர மன்னன் செங்குட்டுவன் அவனை எல்லோர் முன்னிலையிலும் பாராட்டினான். எதிரி நாடாக இருந்தாலும் இருந்தாலும் நீதியின் வளைந்த செங்கோளை தன் உயிரி நீத்து நிமிர்த்திய பண்பைப் பாராட்டுவது இன்றைய சர்வதேசச் சட்ட மரபிற்கு ஒரு சிறந்த கொள்கையாக அமைகிறது.
பண்டைய தமிழகத்தின் போர் தொடர்பான சட்டக்கூறுகள்
போரை வெளிப்படையாக அறிவித்தல் என்பது ஒரு அரசின் இறையாண்மையாக இன்றும் கருதப்படுகிறது. போரை வெளிப்படையாக அறிவித்தல் ஒரு நேர்மையான போர் நெறிமுறை. இதன்மூலம் எதிரிநாட்டு மன்னனுக்கு போருக்கான தயாரிப்பில் ஈடுபடுவதற்கான நேர அவகாசம் கிடைக்கும். தீடீரென்றுத் தாக்கி நிலைக்குலையச் செய்வது ஒரு சிறந்த போர் அறம் ஆகாது. பாண்டியன் பல்யாகசாலை முதுகுடி பெருவழுதி எதிரிகள் மேல் தன்னுடைய போரை அறிவிக்கும் போது ‘விலங்குகளும், பெண்டீரும், நோயுற்றோரும், அறவோரும், பிள்ளைகள் இல்லாதவரும் தன்னைக் காத்துக் கொள்க. நாங்கள் எங்களுடைய அம்புகளை எய்ய தயாராக இருக்கிறோம்’.[5] என்று அறிவிக்கிறான். சேர மன்னன் செங்குட்டுவனோ தலைநகரில் தன்னுடைய போர் பிரகடனத்தைச் செய்யும் போது அதை தூதுவன் மூலம் எதிரி மன்னனுக்கு நேரில் தெரிவிக்க விளைகிறான். ஆனால் அவன் படைத்தளபதி அலும்பில் வேல் ‘இது தேவையில்லை. எதிரி நாட்டு ஒற்றர்கள் நம் தலைநகரெங்கும் இருக்கிறார்கள். அவர்கள் அத்தகவலை எதிரி மன்னனுக்கு அறிவித்து விடுவார்கள்’ என்று கூறி அதை தடுத்து விடுகிறான்.
இதன்மூலம் போர் வரும்போது எதிரிநாட்டு மன்னன் தயாராய் இருந்தால்தான் ஒரு நேர்மறையான சமர் (சமமானவர்கள் செய்வது) செய்ய முடியும் என்றும் பெண்கள், முதியோர், குழந்தைகள், நோய்வாய்ப்பட்டவர் மற்றும் கால்நடைகள் முதலிய போருக்கு சம்பந்தமில்லாத உயிர்கள் பலியாவது தடுக்கப்படும் என்ற போர்க்கால சர்வதேசச் சட்டம் நடைமுறையில் இருந்தது அறியத் தெரிகிறது.
சங்க காலத்தில் போரில் தோற்றவரை நடத்தும் நெறிமுறைகள்
சங்க இலக்கியம் பல்வேறு பெயர்களில் தொகுக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று பத்துப்பாட்டு. மாங்குடி மருதனார் இயற்றிய மதுரைக்காஞ்சி அதில் ஒன்று. அதில் அவர் தலையானங்கானத்து செருவென்ற இரண்டாம் நெருஞ்செழியனைப் பற்றிப் பாடும் போது பகைவரை அடக்கி அவரை அறவழியில் நிறுத்தல் என்ற தலைப்பில் போரில் புறமுதுகிட்டு ஓடும் எதிரிநாட்டு வீரர்களைத் தாக்க எங்கள் தோள்கள் எழாது என்று பாடுகிறார். சுத்த வீரன் என்பவன் பயந்து ஓடும் எதிரி வீரர்களைத் தாக்க மாட்டான் என்ற போர்க்கள விதியை இப்பாடலில் அறிவுறுத்துகிறார்.[6]
சேரன் செங்குட்டுவன் எதிரிநாட்டு மன்னர்களான கனக விஜயனை தோற்கடித்து அவர்களைக் கைதியாகத் தன்னாட்டிற்குப் பிடித்து வந்தான். தன் நாடு அழைத்து வந்து இருவரையும் விடுவித்து ஒரு அரண்மணையில் சகல வசதிகளோடும் தங்க வைத்தான் என சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கூறுகிறார். இதன்மூலம் போர்க்கைதிகளை மன்னித்து அவர்கள் உரிமைகளைக் கொடுத்து சமமாக நடத்தும் பண்பு தமிழகத்தில் இருந்ததை அறியலாம்.
போரில் நடுநிலை வகித்தல்
இரண்டாம் உலகப்போரில் சுவிட்சர்லாந்து போன்ற நாடுகள் நடுநிலை வகித்தன. இன்றைய நவீன காலக்கட்டத்தில் அது ஒரு மரபாக உள்ளது. நடுநிலை வகிக்கும் நாடுகளைப் போரிடும் நாடுகள் தாக்காது. அந்நாட்டின் ஊடும் படைகளை அனுப்பாது. இப்போரிடாத நடுநிலை வகிக்கும் நாடுகள் மற்ற நாடுகள் எதற்கும் உதவி செய்யாமல் அப்போரில் தலையிடாமல் இருக்கும். சங்க காலத்தில் இத்தகைய நடுநிலை நாடுகள் இருந்தன என்பது ஒரு ஆச்சர்யமான வரலாறு. சேரநாட்டின் மன்னனான பெருஞ்சோற்று உதியலாதன் பெரும் போரான பாரத போரில் இருபக்கமும் சேராமல் நடுநிலை வகிக்கிறான். மகாபாரதப் போரானது ஒரு கற்பனையே. ஆனாலும் புலவர் அப்போரைக் குறிப்பிடுகிறாரா அல்லது வேறு பெரும் போரா என்பதில் தெளிவில்லை. ஆனாலும் அத்தகைய மரபு இருந்தது தெரிய வருகிறது. சேரன் பேரில் நடுநிலைமை மட்டுமே வகிக்கவில்லை. அப்போரில் படைகளுக்கு உணவு அளிக்கிறான் என்பது ஆச்சர்யமான செய்தி. அவன் இருதரப்பினருக்கும் உதவிகள் செய்கிறான். இத்தகைய உதவியானது இன்று செஞ்சிலுவை சங்கத்தின் உதவி போன்றது. போரில் எப்பக்கமும் சேராமல் இருநாட்டைச் சேர்ந்த படைகளுக்கும் போரின் இன்னல்களில் இருந்து தப்பிக்க உதவுவது ஒரு மிகப்பெரும் மனிதாபிமான செயல். இத்தகைய செயலில் ஒரு சங்க காலத்தைச் சேர்ந்த சேரமன்னன் ஈடுபட்டான் என்பது காலத்திற்கும் நிலைக்கும் செயல். இத்தகைய செஞ்சுலுவை சங்ககங்களுக்கு முன்னோடியாக அச்செயல் இருந்தது என்பது கவனிக்கத்தக்கது.
மனிதாபிமான அடிப்படையில் முற்றுகையை விலக்குதல்
சேரமன்னனான குளமுற்றத்து துஞ்சிய கிள்ளிவளவனும் கரூவூர் மன்னனுக்கும் போர் நிகழ்கிறது. கிள்ளிவளவனிடன் தோற்ற கரூவூர் மன்னன் அவனுடைய கோட்டைக்குள் சென்று பதுங்கிக்கொண்டான். கிள்ளிவளவனும் விடாது அவனுடைய கோட்டையை முற்றுகையிட்டான். அப்போது புலவராகிய ஆலந்தூர் கிழார் அம்முற்றுகையை விலக்குமாறு கிள்ளிவளவனுக்கு அறிவுருத்தினார்.
பொதுவாக சங்ககாலப் புலவர்கள் மன்னருக்கு அமைச்சராகவும் ஆலோசனை சொல்பவராகவும் இருந்தனர். அமைச்சராக இல்லாவிடினும் சங்ககால புலவர்களிடம் பெருமதிப்பு வைத்திருந்தனர். மன்னர் அறம் மாறி நடக்கும் போதெல்லாம் மன்னருக்கு அறிவுரைக் கூறி அவர்களை நல்வழிப்படுத்தினர். ஆலந்தூர் கிழாரும் அவ்வகையில் கிள்ளி வளவனை நோக்கி “கோட்டையில் பதுங்கி இருக்கும் சேரமன்னனான கரூவூர் மன்னனின் காதுகளில் சோழ வீரர்களின் ஆயுதங்களின் ஒலி விழாமல் இருக்காது. அது கேட்டும் போருக்கு எழுந்து வராமல் அங்கேயே அவன் இனிதாக இருக்கிறானே! வீரமற்ற அத்தகையவனுடன் முரசு கறங்க நீ போரிட்டனை என்பது வெட்கம் தரும் செயலாம். போரிடுவதும் விடுவதும் உன் விருப்பம்” என்று கூறுகிறார். இவ்வாறு தோற்ற மன்னனை மேலும் துன்புறுத்தாமல் முற்றுகையை விலக்கிச் செல்வதுதான் போர் அறம் என்று சோழனை இடித்துரைக்கிறார். இதைக் கேட்ட சோழனும் சங்ககால போர் நெறியின் படி முற்றுகையை விலக்கி தன்னாடு செல்கிறான்.[7]
மற்றொரு இடத்தில் சோழன் கிள்ளிவளவன் தன்னிடம் தோற்ற மலையமானின் குழந்தைகளை யானைக்காலில் இட்டுக் கொல்ல முடிவுசெய்கிறான். அங்கு வந்த மற்றொரு புலவரான கோவூர் கிழார் தோற்ற எதிரியின் குழந்தைகளைக் கொல்வது போர் மரபு அன்று. அக்குழந்தைகள் தன்னை கொல்லவரும் யானையை அறியாமல் சிரித்து மகிழ்கின்றனர். ஆகவே இத்தகைய இளஞ்சிறார்களைக் கொல்வது போர்நெறி ஆகாது என்று கூறி மன்னனைத் திருத்தி நல்வழிப்படுத்திய செய்தியை நாம் காணலாம். இன்றைய சர்வதேச போர்நெறிமுறைகளில் குழந்தைகளைக் கொல்வது மட்டும் அல்ல, போர்க்களத்தில் குழந்தைகளை ஈடுபடுத்துவதும் தவறு என்ற வரையறை உள்ளது.[8] (Ancient Tamil Humanitarian law of not harming the children)
பண்டைய தமிழகப் போர்ச்சட்டமான துறவிகளைத் துன்புறுத்தாமை
வடக்கத்திய மன்னர்களான கனகன் மற்றும் விஜயன் தமிழகத்தையும் தமிழக மன்னர்களையும் இழிவு படுத்தினர். அவர்களின் இந்த அடாத செயலுக்குத் தக்க பாடம் புகட்ட சேரன் செங்குட்டுவன் அவர்களின் மீது படையெடுத்தான். போர் கங்கைச் சமவெளியில் நடந்தது. சேரன் படை வீரத்தின் முன் நிற்க முடியாமல் கனக-விஜயன் படைகள் சிதறி ஓடின. அப்படித் தப்பி ஓடும் போது அவர்கள் எதிரி படையில் சிக்காமல் இருக்க காவி உடை அணிந்து ஜடா முடி தரித்துச் சென்றனர். அவர்கள் துறவிகளுக்கு உரிய உடைகளை அணிந்து மயில் தோகைகளைச் சூடிக்கொண்டனர். இவ்வாறு துறவி உடை உடுத்தி தப்பித்தவர்களைச் சேரனின் படைகள் தாக்கவில்லலை.[9] இதன்மூலம் மதத்துறவிகளைத் துன்புறுத்தாத பண்பு பண்டைய தமிழகத்தில் நடைமுறையில் இருந்தது தெரியவருகிறது. இது இன்றைய ஜெனிவா சட்ட நெறிகளுடன் ஒன்றாக வைத்து எண்ணத்தக்கது.
முடிவுரை
சங்க இலக்கியங்களும் அதன் பின்னால் வந்த பண்டைய தமிழ் இலக்கியங்களும் முற்கால தமிழகத்தின் போர்முறை மற்றும் போர் அறம் குறித்த செய்திகள் சிலவற்றை இக்கட்டுரை தொகுக்கிறது. சமஸ்கிருத கலாச்சாரத்தைத் தவிர்த்து தமிழ்ப்பண்பாடு கலாச்சாரத்தின் ஊடாக இச்சர்வதேசச் சட்டங்கள் பண்டைய தமிழக இலக்கியங்களில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளன. அரசின் நடைமுறை பல்வேறு சர்வதேச சட்டத்தின் கொள்கை பின்பற்றப்பட்டவையாகத் தெரிய வருகிறது. சர்வதேசச் சட்டத்தின் முதன்மையான போக்கு ஐரோப்பிய காலாச்சாரத்தைச் சார்ந்தது. இன்று மூன்றாம் உலக நாடுகளின் சர்வதேசச் சட்ட அணுகுமுறைகள் (TWAIL) என்று உள்வாங்கப்படுகிறது. அவ்வாறு வருமிடத்தில் இந்தியா என்ற பண்பாட்டில் ஒற்றைக் காலாச்சாரத்தைக் கொண்டு வருவது தவிர்க்கப்பட வேண்டியது. இந்தியா என்பது பல்வேறு மொழி, இன பண்பாட்டைக் கொண்ட துணைக்கண்டமாகும். இதில் சமஸ்கிருதப் பண்பாட்டைத் தவிர்த்து மற்றவற்றை வெளிக்கொண்டு வருவது இந்தியத் துணைக்கண்டத்தின் பன்முகத்தன்மைய வெளிப்படுத்தும். அத்தகைய முயற்சிக்கு இக்கட்டுரை உந்து சக்தியாக விளங்கும் என்று எதிர்பாக்கப்படுகிறது.
About the author –
Dr. Prof. S. Anandha Krishna Raj is an Assistant Professor of Law at the VIT School of Law, VIT University, Chennai.
We would like to extend our special thanks and gratitude to Prof. Atul Alexander, an Assistant Professor of Law at the WB National University of Juridical Sciences (NUJS), Kolkata, for assisting us with his review and inputs.
[1] Kaniyan Poongundran, Purananuru – 192
(Adapted from translation by G.U.Pope, 1906)
[2] Avvaiyar — The Diplomat – vijee venkatraman. http://vijeejournalist.com/2016/10/avvaiyar-the-diplomat/
[3] (Silap – 20:24).
[4] Appar Devaram 6th Thirumurai, poem 961. P 728.
[5]https://learnsangamtamil.com/%e0%ae%8e%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8a%e0%ae%95%e0%af%88-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b1%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%82%e0%ae%b1%e0%af%81-1-200/
[6] The translation of the poem follows
Controlling Enemies and Ruling them with Justice
May your warriors with brave shoulders
who don’t rise up against those who run away in battle,
along with trumpeting, large-footed tuskers with rage,
and ocean-like, huge army attack your enemies
like Murukan!
[7] Puranānūru 36, Poet Ālathūr Kilār sang to Chōlan Kulamutrathuu Thunjiya Killivalavan,
Whether you want to kill him, or whether you want to
let him go, you yourself should judge and understand
what will bring you renown.
[8] Puranānūru 46, Poet Kōvūr Kilār sang to Chōlan Kulamutrathu Thunjiya Killivalavan, Thinai: Vanji, Thurai: Thunai Vanji
[9] The mighty spearmen Kanaka and Vijaya who bore (Silapathikaram 220-230 )
angry spears in their hands and their fifty-two able
chariot- warriors who had spoken insultingly of the Tamil
kings, now fell a prey to the fury of Senguttuvan. Some
others dressed their hair in coiled plaits, some wore ascetic
robes, some smeared themselves with ashes, some looked
like anchorites seated on pedestals with peacock’s feathers,
